தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளின் மீட்பைக் கண்டடைவர்
திருப்பாடல் 50: 8 – 9, 16 – 17, 21, 23 சரியான பாதையில் நடக்கிறவர், தமது வழியைச் செம்மைப்படுத்துகிறவர் யார்? என்பது தான், இந்த பல்லவியைக் கேட்டவுடன் நமது சிந்தனையில் உதிப்பதாக இருக்கிறது. ஏனென்றால், அந்த கேள்விக்கான பதில் நமக்கு கிடைக்கிறபோது, நம்மால், கடவுள் அருளும் மீட்பைக் கண்டடைய முடியும். எசாயா 40: 3 ல், ”ஆண்டவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்” என்ற வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இது மனமாற்றத்தைக் குறிக்கக்கூடிய சொல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்த இறைவார்த்தையை, திருமுழுக்கு யோவானுடைய பணியை மையப்படுத்திய நிகழ்விலும் நாம் பார்க்கலாம். ஆக, செம்மைப்படுத்துதல் என்பது, மனமாற்றத்தைக் குறிக்கிறது. கடவுள் நமக்கு மீட்பை தர தயாராக இருக்கிறார். அந்த மீட்பை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நமது வாழ்வை நாம் மாற்ற வேண்டும். மாற்றம் என்பது நமது வாழ்க்கையில் மற்றவர்கள் பார்க்கக்கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டும். அது வெளிவேடத்தனமாக இருக்கக்கூடாது. மாறாக, மற்றவர்கள் நடுவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக...