இறைவன் விரும்பும் விழாக்கள்
ஆமோஸ் 5: 14 – 15, 21 – 24 “உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்” என்று படைகளின் கடவுள் சொல்வதாக, ஆமோஸ் இறைவாக்கு உரைக்கின்றார். இணைச்சட்டம் 23: 14 ல் கடவுள் சொல்கிறார்: “நீ எனக்கு ஆண்டிற்கு மூன்றுமுறை விழா எடுப்பாய்”. இறைவன் இஸ்ரயேல் மக்களிடம் விழா எடுக்கச் சொல்கிறார். ஆனால், இறைவாக்கினர் ஆமோஸ், இறைவன் விழாக்களை அருவருப்பதாக இறைவாக்கு உரைக்கின்றார். இதை எப்படி புரிந்து கொள்வது? இஸ்ரயேல் மக்கள் கொண்டாடும் விழாக்களில் முக்கியமானது பாஸ்கா விழா. இந்த விழா, கடவுள் இஸ்ரயேல் மக்களை அற்புதமாக, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கடந்து போகும் நிகழ்வை நினைவுபடுத்துகிறது. கூடாரத்திருவிழா, இஸ்ரயேல் மக்கள் நாற்பது ஆண்டு காலம் பாலைவனத்தில் வாழ்ந்ததையும், அவர்களை இறைவன் உணவில்லாத, நீரில்லாத பாலைவனத்திலும் அற்புதமாக வழிநடத்தியதையும் குறிக்கிறது. மற்ற விழாக்களில் இஸ்ரயேல் மக்கள் செலுத்தும் காணிக்கைகள் குறிப்பாக, அறுவடையிலிருந்தும், தங்களுடைய கால்நடையிலிருந்தும் செலுத்தும் காணிக்கைகள், அவர்கள் கடவுள் மீது...