கடவுள் நம்மோடு இருக்கிறவர்
இயேசு வாழ்ந்த காலத்தில், கடவுள் எங்கோ தொலைவில் இருக்கிறார் என்கிற ரீதியில்தான் கடவுளைப்பற்றிய பார்வை இருந்தது. கடவுள் காணமுடியாதவராக இருந்தார். கடவுள் தொடமுடியாதவராக இருந்தார். விடுதலைப்பயண நூல் 33: 12 – 23 வரை உள்ள இறைவசனங்களில், மோசே கடவுளைப்பார்த்த நிகழ்வு நமக்கு தரப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிகழ்வில் கூட, கடவுள் மோசேயிடம், “என் முகத்தையோ உன்னால் பார்க்க இயலாது. ஏனெனில், என்னைப்பார்த்த எவரும் உயிரோடிருக்க முடியாது…… நான் என் கையை அகற்றுவேன். நீ என் பின்புறத்தைக்காண்பாய். என் முகத்தையோ காணமாட்டாய்” என்றார். அப்படியிருக்கிற சூழ்நிலையில், இயேசு வெகுஎளிதாக “என்னைக்காண்பது தந்தையைக் காண்பது ஆகும்” என்கிறார். இது எப்படி? இயேசு கடவுளைப்பற்றியப் புதிய பார்வையை நமக்குத்தருகிறார். கடவுள் எங்கோ இருக்கிறவர் அல்ல. எங்கோ இருந்துகொண்டு நம்மை அறியாதவர் அல்ல. நம்முடைய துன்பங்கள், துயரங்கள், வாழ்வின் கஷ்ட, நஷ்டங்கள் தெரியாதவர் அல்ல. படைத்ததோடு அவரது பணி முடிந்துவிடவில்லை. தொடர்ந்து நம்மோடு அவர் இருக்கிறார்....