கடவுளின் அருகாமையில் இருக்க….
தீய ஆவிகள் இயேசுவைக்கண்டதும், ”இறைமகன் நீரே” என்று கத்தியதாக நற்செய்தி கூறுகிறது. ”இறைமகன்” என்ற வார்த்தையின் பொருளை இங்கு நாம் பார்ப்போம். இறைமகன் என்கிற வார்த்தை, மத்திய கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த மக்களால், அடிக்கடி பயன்படுத்தப்பட்ட வார்த்தை. எகிப்து தேசத்தின் அரசர்கள் ”இறைமகன்” என்று அழைக்கப்பட்டனர். அகுஸ்துஸ் சீசர் முதல் ஒவ்வொரு உரோமை அரசர்களும் ”இறைமகன்” என்று அழைக்கப்பட்டனர். பழைய ஏற்பாட்டில் நான்கு வழிகளில் இந்த வார்த்தை பயன்படுகிறது. 1. வானதூதர்கள் கடவுளின் மகன்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். தொடக்க நூல் 6: 2 ல் ”மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப்புதல்வர் கண்டு…. ” என்று பார்க்கிறோம். 2. இஸ்ரயேல் நாடு கடவுளின் மகனாகக் கருதப்படுகிறது. ஓசேயா 11: 1 ”எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்”. இங்கே இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததும், அவர்களைக் கடவுள் அழைத்து வந்ததும் தெரியப்படுத்தப்படுகிறது. 3. ஒரு நாட்டின் அரசர், கடவுளின் மகனாக பார்க்கப்படுகிறார்....