பொல்லார் கையினின்று என்னை விடுவித்தருளும்
திருப்பாடல் 71: 1 – 2, 3 – 4, 5 – 6, 17 பொல்லார் யார்? தீங்கு செய்யக்கூடியவர்களே பொல்லார். தீங்கு செய்யக்கூடிய மனிதர்களிடமிருந்து விடுவித்தருள வேண்டும் என, திருப்பாடல் ஆசிரியர் வேண்டுகிறார். யாரெல்லாம் சுயநலத்தோடு சிந்திக்கிறார்களோ அவர்களே தீங்கு செய்யக்கூடியவர்கள். அவர்கள் வெறுமனே உடலுக்கு மட்டும் தீங்கு செய்யக்கூடியவர்கள் அல்ல. மாறாக, அவர்கள் ஆன்மாவிற்கும் ஊறு விளைவிக்கக்கூடியவர்கள். அவர்களின் சுயநலத்திலிருந்தும், தீங்கு செய்யக்கூடிய எண்ணத்திலுமிருந்து தன்னைக் காத்தருள கோரிக்கை வைக்கிறார். ஏன் கடவுளிடம் கோரிக்கை வைக்கிறார்? கடவுள் மட்டும் தான், அரணாகவும், கோட்டையாகவும் இருந்து தன்னை காக்க முடியும் என்று, ஆசிரியர் நம்புகிறார். மனிதன் பலவீனன். அவன் நல்லவனாக வாழ வேண்டும் என்று விரும்பினாலும், நினைத்தாலும் இந்த உலகம் அவனை சும்மா விட்டுவிடாது. ஒருவன் நல்லவனாக வாழ விரும்பினால், அவன் சந்திக்கக்கூடிய சவால்கள் இந்த உலகத்தில் நம்ப முடியாதவையாக இருக்கும். அந்த அளவுக்கு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்....