உறவை வலுப்படுத்த முயற்சி எடுப்போம்
இயேசுவிடம் பார்வையற்ற ஒருவரை அழைத்து வருகிறார்கள். இயேசு அவரை தனியே ஊருக்கு வெளியே அழைத்துச்செல்வதை பார்க்கிறோம். வழக்கமாக மக்கள் மத்தியில் அனைவரும் விசுவாசம் கொள்ளும்பொருட்டு, விசுவாசத்தின் அடிப்படையில் குணம்கொடுக்கும் இயேசுவின் இந்த செயல் சற்று வித்தியாசமானதாகவும், விசித்திரமானதாகவும் இருக்கிறது. ஏன் இந்த மாறுபாடான செயல்? பொதுவாக, நல்ல மருத்துவர் என்று மக்களால் பாராட்டப்படுகிறவர், அதிகமாக படித்தவர் என்பதில்லை, மாறாக எந்த மருத்துவர் நோயாளிகளின் உணர்வுகளைப்புரிந்துகொண்டு, மருத்துவம் செய்கிறாரோ அவர்;தான் மக்கள் நடுவில் சிறந்தவராக கருதப்படுகிறார். நோயாளியின் உணர்வுகள், அவரது பயம், அவரது கவலை அடிப்படையில் மருத்துவம் செய்கின்றபோது, நோயாளி உடனடியாக குணமடைந்துவிடுவார். ஆனால், இந்த கலை எல்லாருக்கும் இருப்பதில்லை. இயேசு சிறந்த மருத்துவர். அவர் பார்வையற்ற அந்த மனிதரின் உணர்வுகளை நிச்சயமாக புரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்தப்புதுமையில் இயேசுவிடம் இரண்டு வேறுபாடுகளைப்பார்க்கிறோம். 1. இயேசு அந்த மனிதரை தனியே அழைத்துச்செல்கிறார். 2. உடனடியாக பார்வையைக்கொடுக்காமல், இரண்டு நிலைகள் தாமதித்துப்பின் பார்வை கொடுக்கிறார்....