பலிப்பொருளாக மாற…….
யூதச்சட்டப்படி எந்தவொரு பொருளும் கடவுளுக்கு காணிக்கையிடப்படுவதற்கு முன்னால் உப்பிடப்பட வேண்டும். லேவியர் 2: 13 சொல்கிறது: “நேர்ச்சையான எந்த உணவுப்படையலும் உப்பிடப்பட வேண்டும். உன் உணவுப்படையலில் கடவுளின் உடன்படிக்கையாகிய உப்பைக்குறையவிடாமல் உன் நேர்ச்சைகள் அனைத்தோடும் உப்பையும் படைப்பாயாக.” இந்த பலி செலுத்தப்படுகிற உப்பு, உடன்படிக்கையின் அடையாளமாகும். ஏனெனில் எண்ணிக்கை 18: 19 ல், ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு செய்துகொண்ட உப்பு உடன்படிக்கையைப்பார்க்கிறோம்: “இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் புனிதப்படையல்கள் அனைத்தையும் நான் உனக்கும் உன்னோடிருக்கும் உன் புதல்வர் புதல்வியருக்கும் என்றுமுள நியமமாகத் தருகிறேன்: இது உனக்கும் உன்னோடிருக்கும் உன்வழி மரபுக்கும் ஆண்டவர் திருமுன் என்றுமுள ‘உப்பு உடன்படிக்கை’ ஆகும். ஆக, படையல்களில் உப்பு சேர்ப்பது ஆண்டவர்க்கு உகந்த பலியாய் இருக்கிறது. இன்றைய நற்செய்தியிலே இயேசு கூறுகிறார்: “பலிப்பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவதுபோல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர்” (மாற்கு 9: 49). இங்கே நெருப்பு என்ற வார்த்தைக்கு தூய ஆவியை நாம் ஒப்பிட்டுப்பேசலாம்....