இறைவனின் உண்மையான அன்பு
செப்பனியா 3: 14 – 18 ”சீயோனின் மகளே! மகிழ்ச்சியாய் ஆர்ப்பரி! ஆரவாரம் செய்! மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி!” என்று, இறைவாக்கினர் செப்பனியா தன்னுடைய உள்ளத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். எதற்காக இந்த ஆரவாரம்? ஏன் இந்த ஆர்ப்பரிப்பு? ஏனென்றால், கடவுள் இஸ்ரயேல் மக்களின் பாவங்களையெல்லாம் மன்னித்து விட்டார். அவர்களை தண்டனையிலிருந்து தப்புவித்து விட்டார் என்பதுதான். யூதாவும், எருசலேமும் தாங்கள் செய்த தண்டனையிலிருந்து தப்பிவிட்டார்கள். அவர்களை கடவுள் தண்டிக்கவில்லை. எனவே, கடவுளைப் புகழ்ந்து போற்றி ஆர்ப்பரிக்க இறைவாக்கினர் கேட்டுக்கொள்கிறார். ஆர்ப்பரித்து மகிழ்ச்சி கொள்ளக்கூடிய தருணத்தில், மற்றொரு செய்தியும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது அவர்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம் என்பது. ”சீயோனே! அஞ்ச வேண்டாம்!” எதற்காக அஞ்ச வேண்டாம்? ”கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்!” இஸ்ரயேல் மக்கள் தாங்கள் கடவுளுக்கு எதிராக செய்த பாவங்களை நினைத்துப் பார்த்து, பயம் கொள்கிறார்கள். கடவுளைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். ஏனென்றால், தாங்கள்...