உயிர்ப்பில் நம்பிக்கை உண்டா ?
உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாதவர்கள் இயேசுவின் காலத்தில் இருந்தனர். அவர்களே சதுசேயர். எனவே, உயிர்ப்பை மறுக்கும் வகையில் இயேசுவிடம் கேள்வி எழுப்புகின்றனர். இயேசுவோ மிகுந்த ஞானத்துடன் அவர்களுக்குப் பதில் கொடுக்கின்றார். நம் இறைவன் வாழ்வோரின் கடவுள். அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே என்கிறார் ஆண்டவர். உயிர்ப்பில், மறுவாழ்வில் நம்பிக்கை என்பது அறநெறியியலுக்கு மிக அவசியமான ஒரு கோட்பாடு. உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டவர்கள் இவ்வுலக வாழ்விலும் நேர்மையோடு, அறநெறியோடு வாழ அதிகம் கடமைப் பட்டவர்கள். மறுவாழ்வில் நம்பிக்கை அற்றவர்கள் இவ்வுலக வாழ்வுக்கான கட்டுப்பாடுகள் அதிகம் இன்றியே வாழ்ந்துவிடலாம். உண்போம், குடிப்போம், நாளை மடிவோம் என்று இவர்கள் வாழ்ந்துவிடலாம். ஆனால், மறுவாழ்வில் நம்பிக்கை கொண்டோர் மறுவாழ்வுக்கான ஆயத்தப் பணிகளை இந்த உலகிலேயே செய்யக் கடமைபட்டுள்ளனர். இறந்தோரை சிறப்பாக நினைவுகூரும் இந்த மாதத்தில் நமது மறுவாழ்வு நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் ஆழப்படுத்திக் கொள்வோம். உயிர்ப்பில் நம்பிக்கை இருந்தால், நமது வாழ்வு இன்னும் அதிக பொருள் உள்ளதாக அமையும்....