ஆண்டவரே என் ஆதரவு
திருப்பாடல் 3: 1 – 2, 3 – 4, 5 – 7ஆ இந்த உலகம் தீமைகள் நிறைந்த உலகம். இங்கே விழுமியங்களுக்கும், நல்ல மதிப்பீடுகளுக்கும் மதிப்பில்லை. நல்லவர்கள் மதிக்கப்படுவதில்லை. கெட்டவர்களுக்குத்தான் வாழ்வு இருக்கிறது. அவர்கள் மட்டுமே இந்த உலகத்தில் வாழ முடியும் என்கிற தோற்றமும் இருக்கிறது. இத்தகைய உலகத்தில் நல்லவர்கள் வாழ முடியுமா? இந்த உலகத்தை எதிர்த்து அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க முடியுமா? எதிர்ப்புக்களுக்கு நடுவில் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியுமா? முடியும் என்பதை இந்த திருப்பாடல் நமக்கு எடுத்துரைக்கிறது. ”என் எதிரிகள் பெருகிவிட்டனர்” என்கிற வார்த்தை, நல்ல மதிப்பீடுகளுக்காக திருப்பாடல் ஆசிரியர் துணிந்து நிற்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. திருப்பாடல் ஆசிரியர் விழுமியங்களுக்கு குரல் கொடுக்கிறவராக இருக்கிறார். அதனால் அவருக்கு பல எதிரிகள் வந்துவிட்டனர். அவர்களை எதிர்த்து நிற்பது எளிதல்ல. ஆனாலும், கடவுள் இருக்கிறார் என்கிற நம்பிக்கை அவருக்கு மிகப்பெரிய ஆறுதலையும், உற்சாகத்தையும் தருகிறது. கடவுள் இருக்கிறார் என்கிற...