புதுமை வழங்கும் செய்தி
1அரசர்கள் 17: 7 – 16 மற்றவர்களுக்கு கொடுத்து உதவுகிற மனம் இருக்கிறபோது, அவர்கள் கடவுளின் நிறைவான ஆசீரைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதுதான் இன்றைய வாசகம் நமக்குத் தருகிற செய்தியாக இருக்கிறது. இறைவாக்கினர் எலியா சாரிபாத்துக்குச் செல்கிறார். அங்கு அவர் ஒரு கைம்பெண்ணை பார்க்கிறார். அந்த பெண்ணிடத்தில் உண்பதற்கும், குடிப்பதற்கும் கேட்கிறார். அந்த பெண் ஏற்கெனவே பஞ்சத்தின் பிடியில் இருக்கிறார். கிட்டத்தட்ட வாழ்க்கை முடிகிற தருணம். தன்னுடைய உண்மையான நிலையை இறைவாக்கினரிடத்தில் எடுத்துச் சொல்கிறார். ஆனாலும், இறைவாக்கினர் தன்னுடைய பசியை ஆற்றுவதற்கு கேட்கிறார். அவள் மறுக்கவில்லை. தன்னுடைய இயலாமை நிலையிலும், இறைவாக்கினரின் வார்த்தைகளுக்கு செவிமடுக்கிறார். அங்கே ஒரு புதுமை நிகழ்கிறது. இந்த புதுமை இங்கே நிகழ்வதற்கு என்னென்ன காரணங்கள் என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். முதலில் புதுமை நிகழ்வது கடவுளின் திருவுளத்தைக் குறிப்பதாக இருக்கிறது. ஆண்டவரது வாக்கு எலியாவுக்கு வந்தபோது, அனைத்தும் அவருக்கு தெளிவாக விளக்கப்படுகிறது. சாரிபாத்தில் இருக்கிற ஒரு கைம்பெண்ணிடத்தில் அவருடைய உணவுக்கு...