நல்லதையே ஆண்டவர் அருள்வார்
திருப்பாடல் 85: 8 – 9, 10 – 11, 12 – 13 இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் கடவுளைப் பற்றி பல்வேறு புரிதல்களை வைத்திருந்தனர். அதில் ஒன்று, கடவுள் கண்டிப்புமிக்கவர். தவறுக்கு தண்டனை வழங்கக்கூடியவர். மக்களின் துன்பங்களுக்கு காரணம், அவர்கள் செய்த தவறுகளே. அது கடவுளிடமிருந்து வருகிறது என்று, அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். கடவுள் மக்களை நல்வழிப்படுத்த கண்டிப்புமிகுந்தவர் தான். எப்படி ஒரு தாய், தன்னுடைய குழந்தை நன்றாக வளர, கண்டிப்பு காட்டுகிறாளோ, அதேபோல, நாம் மகிழ்ச்சியாக வாழ கடவுளும் கண்டிப்பு காட்டுகிறார். ஆனால், இந்த திருப்பாடல், கடவுளின் கண்டிப்பை விட, கடவுளின் இரக்கமும் அருளும் மிகுதியாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. கடவுள் எப்போதும் நமக்கு நல்லதை வழங்குவதற்கே விரும்புகிறார் என்று இந்த திருப்பாடல் கற்றுக்கொடுக்கிறது. கடவுள் நல்லவர். நன்மைகளைச் செய்கிறவர். நாம் நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதையே விரும்புகிறவர். கடவுள் எப்போதும் நாம் அழிந்து போக வேண்டும் என்பதை விரும்பக்கூடியவர்...