என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை
திருப்பாடல் 17: 1, 5 – 6, 8 & 15 கடவுளிடம் உதவிக்காக ஆசிரியர் மன்றாடுகிறார். தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பது அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுகிறது. ”என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்” என்கிற வார்த்தைகள், மற்றவர்கள் அவருக்கு எதிராக இருப்பதையும், யாருமே அவருக்கு ஆதரவாக இல்லை என்பதையும் வெளிப்படுத்துககிறது. ஆனாலும், அவர் நம்பிக்கை உள்ளவராக இருக்கிறார். ஏனென்றால், அவருக்கு தன் மீது நம்பிக்கை இருக்கிறது. தான் வாழும் வாழ்க்கை மீது நம்பிக்கை இருக்கிறது. கடவுள் முன்னிலையில் தான் மாசற்ற வாழ்க்கை வாழ்வதால், தன்னால் கடவுளிமிருந்து உதவியைப் பெற முடியும் என்று நம்புகிறார். அந்த நம்பிக்கை தான் இங்கே வெளிப்படுகிறது. கடவுள் நமக்கு உடனிருந்து உதவி செய்யக்கூடியவராக இருக்கிறார். எப்போது என்றால், நாம் அவருடைய வழிகளில் நடந்து அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறபோது. கடவுளின் ஒழுங்குமுறைகளின்படி நம்முடைய வாழ்வை நாம் அமைத்துக்கொள்கிறபோது, கடவுள் நமக்கு எப்போதும் உதவக்கூடியவராக இருக்கிறார். நம்மை துன்பங்களில் தாங்கிப்பிடிக்கிறவராக...