இறைவனின் தாயுள்ளம்
ஓசேயா 11: 1 – 4, 8 – 9 இறைவாக்கினர் ஓசேயாவின் நூலில் “திருமணம்” என்கிற உறவைப்பற்றிய உருவகம் இருப்பதை நாம் இதுவரை பார்த்தோம். இஸ்ரயேலுக்கும், இறைவனுக்கும் உள்ள உறவு, இந்த திருமண உறவு போன்றது என்பதைத்தான், இறைவாக்கினர் தன்னுடைய இறைவார்த்தையில் பகிர்ந்துகொள்கிறார். ஆனால், 11 ம் அதிகாரம், சற்று மாறுபட்ட உருவகத்தை நமக்குக் கொடுத்து, இந்த அதிகாரத்திற்கான தனித்துவத்தை சிறப்பாக விளக்கிக் கூறுகிறது. இந்த அதிகாரத்தில், பெற்றோர்-பிள்ளை உருவகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதிகாரம் தான், இறைவனுடைய ஆழ்மனத்தை நாம் அறிவதற்கு உதவியானதாக இருக்கிறது. இறைவன் என்றாலே, அன்பும், இரக்கமும் நிறைந்தவர் என்பதை, இந்த அதிகாரத்தில் நாம் கற்றுக்கொள்ளலாம். ஒரு குழந்தையை, அந்த குழந்தையின் தாய் எப்படியெல்லாம் வளர்க்கிறாள்? என்பது நாம் அறிந்த ஒன்று. அது பேசும் மழலைச்சொல், அதுநடைபயிலும் அழகு, அதன் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் தாய் அகமகிழ்கிறாள். குழந்தையின் உலகமாக இருக்கிறாள். குழந்தைக்கும் தாய் தான், உலகமாக இருக்கிறது....