தம் மக்களைத் தேடிவந்து விடுவித்த ஆண்டவரைப் போற்றுவோம்
லூக்கா 1: 69 – 70, 71 – 73, 74 – 75 “தேடுதல்“ என்கிற வார்த்தை, காணாமற்போன ஒன்றை நாம் மீட்பதற்கு செய்யக்கூடிய செயலைக்குறிக்கக்கூடிய சொல். கடவுள் தம் மக்களைத் தேடிவருகிறார் என்றால் என்ன? இஸ்ரயேல் மக்களை கடவுள் தன் சொந்த மக்களாகத் தேர்ந்தெடுத்திருந்தார். இதனுடைய பொருள், கடவுள் இஸ்ரயேல் மக்களை மட்டும் மிகுதியாக அன்பு செய்தார் என்பதல்ல. ஏனென்றால், எல்லா மக்களுமே கடவுளின் சாயலைப் பெற்றவர்கள் தான். அவர்களையும் கடவுள் அன்பு செய்கிறார். ஆனால், தான் வாக்களித்திருக்கிற மீட்பை, இந்த உலகத்திற்குக் கொண்டு வர, கடவுள் இஸ்ரயேல் மக்களை கருவியாகப் பயன்படுத்த நினைக்கிறார். எனவே, அவர்களை தன்னுடைய மீட்புத்திட்டத்தில் முழுமையாகப் பயன்படுத்துவதற்கு தயாரித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் அதனை தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். தாங்கள் என்ன செய்தாலும், கடவுள் தங்களைத் தண்டிக்க மாட்டார் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள். தவறுக்கு மேல் தவறு செய்கிறார்கள். இது கடவுளுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது....