இரத்த உறவா? இறை உறவா?

மாற்கு 3: 31 – 35
இரத்த உறவா? இறை உறவா?

உறவு என்பது வீடு, நாடு, உலகம் அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்து அமைதியாக இயக்கக்கூடிய வல்லமை உடையது. அதனால் தான் தமிழர் வாழ்வில் இரத்த உறவு இல்லாதவர்களைக் கூட அன்பு மிகும்போது ‘அண்ணா’ என்றோ ‘தம்பி’ என்றோ ‘மாமா’ என்றோ, ‘தங்கச்சி’ என்றோ அழைப்பது வழக்கம். மிகப்பெரிய மனிதர்களைப் போற்றும்போது கூட உறவுப் பெயர்களால் அழைக்கிறோம். இப்படி மேன்மைக்கு உரியவர்களை உறவுப் பெயர்களால் அழைப்பதன் மூலம், உறவுகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம் என்பது உறுதியாகிறது. ஆனால் எப்படிப்பட்ட உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதனை இன்றைய வாசகம் கற்றுக் கொடுக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இரத்த உறவை விட இறை உறவு மேலானது என்பதன் மகத்துவத்தை எடுத்துக் கூறுகின்றார். என் தாயும் என் சகோதரர்களும் யார்? என்ற இயேசுவின் வார்த்தைகள் தம் தாயை அவமதிப்புள்ளாக்கியவை என்று எண்ண வேண்டியதில்லை. அத்தகைய ஒரு நிலைப்பாட்டை இயேசு கட்டாயம் எடுத்திருக்க மாட்டார் என்று அவர் தொடர்ந்து கூறிய வார்த்தை தெளிவுபடுத்துகின்றன. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் தாயும் ஆவார் என இயேசு கூறியது அன்னை மரியாளுக்கு அழகாய் பொருந்தும். ஏனெனில் அவர் கடவுளின் அழைப்பை ஏற்று அதன்படி வாழ்ந்து கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, அவரைப் போல வாழ்கின்றவர்கள் அனைவருமே தமக்கு நெருங்கிய உறவினர்கள் என்று கூறி உறவுக்கு உரு கொடுக்கின்றார். இறை உறவு என்பது இறைவார்த்தைக்கு செவிமடுப்பதில் அடங்கியுள்ளது என்பதனைச் சுட்டிக் காட்டுகிறார்.

எனது அன்றாட வாழ்வில் நான் எத்தகைய உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றேன்? இரத்த உறவு வேண்டும், ஆனால் அதை விட இறை உறவு முக்கியமானது. இரத்த உறவு உருகிவிடும் ஆனால் இறை உறவு உறைந்து காணப்படும். சிந்திப்போம், உருகுதலா? அல்லது உறைதலா?

– அருட்பணி. பிரதாப்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.