முகமலர்ச்சியோடு கொடுப்போம்
2கொரிந்தியர் 9: 6 – 10 கொடுத்தல் என்பது கிறிஸ்தவத்தின் முக்கியமான பண்பாகும். எனவே தான், தாய்த்திருச்சபை இறைமக்களின் பகிர்வை அதிகமாக எதிர்பார்க்கிறது. அவர்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட கொடைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அழைப்பும்விடுக்கிறது. குறிப்பாக, திருச்சபையின் முக்கியமான விழாக்களிலும், முக்கியமான காலங்களிலும், கொடுத்தலை அதிகமாக வலியுறுத்திச் சொல்கிறது. கொரிந்து நகர மக்களுக்கு, கொடுத்தல் எப்படி இருக்க வேண்டும் என்கிற செய்தியை, தூய பவுலடியார் வழங்குவதை இன்றைய வாசகத்தில் பார்க்கிறோம். நாம் கொடுக்கிறபோது, முகமலர்ச்சியோடு கொடுக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் என்று தூய பவுலடியார் கூறுகிறார். நாம் கொடுப்பது கட்டாயத்தினால் இருக்கக்கூடாது. அல்லது இதனை நான் கொடுத்து தான் ஆக வேண்டுமா? என்கிற இரண்டுவிதமான மனநிலை கொண்டும் கொடுக்கக் கூடாது. இறைவன் எனக்கு தந்திருக்கிறார். இறைவனிடமிருந்து நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். பெற்றுக்கொண்ட இந்த கொடையை, நான் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் நம் உள்ளத்தில் நிறைந்திருக்க வேண்டும்....