கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்
திருப்பாடல் 126: 1ஆ – ஆ, 2இ – 3, 4 – 5, 6 இஸ்ரயேலின் ஆண்டவர் கண்ணீரைத் தரக்கூடிய இறைவன் அல்ல, மாறாக, கண்ணீரைத்துடைத்தெடுக்கிற இறைவன். எங்கெல்லாம் மானிட சமுதாயம் கண்ணீர் வடிக்கிறதோ, இறைவனிடம் முறையிடுகிறதோ, அப்போதெல்லாம் இறைவன் கண்ணீர் வடிக்கிறவரின் தகுதியைப் பார்க்காமல் அவர்களுக்கு உதவி செய்து வந்திருக்கிறார். மீட்பின் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கிறபோது, இந்த உண்மையை நாம் கண்கூடாக பார்க்கலாம். தொடக்கநூலில் காயினும் ஆபேலும் பலி செலுத்துகிறபோது, கடவுள் ஆபேலுடைய பலியை ஏற்றுக்கொள்கிறார். காயீன் பொறாமையினால் தன் சகோதரனை கொன்றுவிடுகிறான். கடவுள் காயீனை தண்டிக்கிறார். ஆனால், காயீன் கடவுளிடத்தில் “என்னைப் பார்க்கிறவர் யாரும் கொன்றுவிட முடியுமே” என்று முறையிடுகிறான். தீங்கு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிற கடவுள், அவன் முறையிடுகிறபோது, அவனுக்கு ஓர் அடையாளமிட்டு அவனுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார். கடவுளின் அருளைப்பெற தகுதி இல்லையென்றாலும், அவன் பாதுகாப்பு பெறுகிறான். இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்து,...