ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்
திருப்பாடல் 72: 1 – 2, 12 – 13, 18 – 19 ஆண்டவருடைய காலம் என்பது எதைக் குறிக்கிறது? இஸ்ரயேல் மக்கள் எப்போதும் இந்த மண்ணக வாழ்வை, தற்காலிகமானதாகவே பார்த்தார்கள். அரசர்கள் அவர்களை ஆள்வதையும் அப்படியே பார்த்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் கடவுள் வருவார் என்கிற நம்பிக்கையோடு வாழ்ந்து வந்தார்கள். அந்த நம்பிக்கை தான், மெசியா வருவார் என்கிற நம்பிக்கையை, அவர்களுக்குக் கொடுத்தது. அதற்காகவே, அவர்கள் தங்கள் வாழ்வை தயாரித்துக் கொண்டிருந்தார்கள். இந்த பிண்ணனியில், ஒரு சில அநியாயமான செயல்கள் நடைபெற்றாலும், அவர்கள் நம்பிக்கை இழந்துவிடவில்லை. கண்டிப்பாக, கடவுள் வந்து இந்த அநியாயங்களை அகற்றி, நீதியை தழைத்தோங்க செய்வார் என்று உறுதியாக நம்பினார்கள். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடு தான், இந்த திருப்பாடல். ஆண்டவரின் அரசு நிச்சயமாக இந்த உலகத்தில் மலரும். அந்த அரசு மலர்கிறபோது, அது ஏழைகளுக்கான அரசாக இருக்கும். மக்கள் விரும்புகிற அரசாக இருக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும், தாழ்த்தப்பட்ட...