இன்றைய தொழுநோய் !
இன்றைய முதல் வாசகமும் (லேவியர் 13: 1-2, 44-46), நற்செய்தி வாசகமும் (மாற்கு 1: 40-45) தொழுநோயைப் பற்றிப் பேசுகின்றன. இயேசுவின் காலத்தில் மக்களால் மிகவும் அருவருக்கப்பட்ட அந்தத் தொழுநோயினின்று ஒரு மனிதரை இயேசு எவ்வாறு மீட்டார் என்பதையே நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கின்றது. இயேசுவின் காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னால் வரை தொழுநோயாளர்களின் நிலை ஒரே மாதிரிதான் இருந்தது. அவர்களது நோய்க்கு மருந்தில்லை. அவர்கள் இறைவனால் தண்டிக்கப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டனர். தம் குடும்பத்தினரிடமிருந்தும், ஊரிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்னும் பட்டியலிலே இருந்தனர். அப்படி இருந்த ஒரு மனிதரைத்தான், இயேசு துணிந்து தொட்டுக் குணப்படுத்தினார். இதிலே நமது கவனத்தைக் கவரும் ஒரு செய்தி என்னவென்றால், இயேசு அவரது உடலை நலப்படுத்தும் முன்னர், அவரது உள்ளத்தையும், ஆன்மாவையும் தொட்டார், நலமாக்கினார் என்பதுதான். இயேசு விரும்பியிருந்தால், அவரைத் தொடாமலே, ஒரு வார்த்தையினால் நலமாக்கியிருக்க முடியும். ஆனால், இயேசுவின் இந்த...