நீதியுள்ளோர் ஆண்டவரைப்புகழ்வது பொருத்தமானதே
திருப்பாடல் 33: 1 – 2, 4 – 5, 18 – 19 இந்த உலகத்தில் நீதிமான்களை எல்லாருமே புறந்தள்ளிவிடுகிறார்கள். அவர்களை எள்ளி நகையாடுகிறார்கள். அவர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அவர்கள் அனைவராலும் ஏளனமாகப் பார்க்கப்படுகிறார்கள். எதற்காக? ஏன் அவர்கள் இப்படிப் பார்க்கப்படுகிறார்கள்? அவர்கள் நீதியோடு, நேர்மையோடு வாழ வேண்டும் என்பது, இந்த உலகத்தின் பார்வையில் வாழத்தெரியாத மனிதர்களாக அவர்களை அடையாளம் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் நேர்மையாக வாழ்ந்ததால், அவர்கள் பல துன்பங்களையும் சந்திக்க நேரிடுகிறது. அந்த துன்பங்களைப் பார்க்கிறபோது, நாம் ஏன் நேர்மையோடு வாழ வேண்டும் என்கிற எண்ணம் நமக்குள்ளாக வருகிறது. ஆனால், இதுதான் சரியான வாழ்க்கை, இப்படி வாழ்வது தான் இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை என்பதை, திருப்பாடல் ஆசிரியர் வலியுறுத்திச் சொல்கிறார். அது கடினமான வாழ்க்கை தான். இந்த உலகத்தின் பார்வையில் பரிகாசம் செய்யப்படக்கூடிய வாழ்க்கை தான். ஆனாலும், அந்த வாழ்க்கையின் நிறைவை, அதை வாழ்பவர்கள் மட்டுமே...