மனமிரங்கி கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்
திருப்பாடல் 112: 1 – 2, 5 – 6, 7 – 8, 9 உதவுதல் என்பது நாம் வாழக்கூடிய சமுதாயத்தில் ஒரு நல்ல விழுமியமாக பார்க்கப்படுகிறது. இன்றைக்கு உதவக்கூடிய மனிதர்கள் எல்லாரும் நல்லவர்களா? என்றால், அதனை நிச்சயமாக சொல்ல முடியாது. ஏனென்றால், இன்றைய உலகத்தில், எதையும் எதிர்பார்த்துச் செய்யும் பழக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒன்றைக்கொடுத்து மற்றொன்றைப் பெறுவத, நாம் வாழும் உலகில் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் செய்யக்கூடிய உதவி எப்படி இருந்தால், கடவுளின் ஆசீரை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை, இந்த திருப்பாடல் எடுத்துரைக்கிறது. நாம் மற்றவர்களுக்கு உதவுகிறபோது எதையும் எதிர்பார்க்காது கொடுக்க வேண்டும். அவர் மேல் நாம் கொண்டிருக்கிற அன்பின் மிகுதியினால் மட்டுமல்ல, மாறாக, நம்முடைய உள்ளத்தில் எழுந்த இரக்கத்தினால், உணர்வினால் பொங்கி எழுந்து கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அதுதான் மனமிரங்கி கொடுப்பது என்பதன் பொருளாகும். சாதாரணமாக, நாம் அதிகமாக அன்பு செய்கிறவர்கள்...