பழிவாங்கல்: தொடர் பகை தலைவிரித்தாடும்
மத்தேயு 18:21-19:1 இறையேசுவில் இனியவா்களே! இன்றைய திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்கள் செய்யும் தவறை மன்னிக்க முடியாமல் பழிவாங்கிக் கொண்டிருக்கும், பழிவாங்க காத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இன்றைய நற்செய்தி வாசகம் “போதும், உங்கள் செயலை நிறுத்துங்கள்” என்ற அறைகூவலோடு வருகின்றது. பழிவாங்குவது என்பது மனிதனை மிருகமாக்கும் குணம். பயம், கோபம், வெறுப்பு ஆகியவையே இந்த பழிவாங்கலின் பின்னால் ஒளிந்து கிடக்கும் தீய உணர்வுகளாகும். வெறுப்பு ஏற்படும்போதும், பழி வாங்கும்போதும் நம் உடலில் தோன்றும் விஷம் நம்மை சிறிது சிறிதாக கொல்வதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆழமாக புதைந்த வெறுப்பினால் மன அழுத்தம் ஏற்படுவதாகவும், படபடப்பு, வயிற்றுப்புண், நரம்புத் தளர்ச்சி, இதய நோய்கள் போன்றவை அடக்க முடியாதகோபம், பழிவாங்கும் வெறி போன்றவற்றால் தூண்டப்படுகின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன....