இறைவனும், இரக்கமும்

விடுதலைப்பயண நூல் 16: 2 – 4, 12 – 15

இறைவன் இஸ்ரயேல் மக்களை அற்புதமாக எகிப்திலிருந்து வழிநடத்தினார். அவர்களை பாலைநிலத்திற்கு அழைத்து வந்தபோது, இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் தங்கள் துன்பக்குரலைக் கேட்டு மனமிரங்கி இறைவன் அழைத்து வந்திருக்கிறாரே? என்று, மக்கள் நன்றியுணர்வு கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் மோசேக்கு எதிராகவும், ஆரோனுக்கு எதிராகவும் அற்பக்காரியங்களுக்காக வெகுண்டெழுகிறார்கள். இவ்வளவு கடினப்பட்டு, கடலைக் கடந்து வழிநடத்தி வந்த இறைவன், தங்களைக் கைவிட்டு விட மாட்டார் என்கிற சிந்தனை அவர்களின் எண்ணத்தில் கூட இல்லாதது வேதனையிலும் வேதனையே. ஆனாலும், இறைவன் பொறுமையாக இருக்கிறார். அவர்கள் மீது கோபம் கொள்ளவில்லை. மாறாக, அவர்களின் முறையீட்டிற்கு என்ன செய்யலாம்? அதற்கு ஆவண செய்கிறார்.

“மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை, இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்” என்று, அவர்களுக்கு செய்தி தருகிறார். அவர் சொன்னது போலவே, மாலையில் காடைகளைக் கொடுத்தும், காலையில் பனிப்படலம் போன்று உறைந்திருந்த, மன்னா என்கிற உணவு மூலமாகவும், அவர்களது பசியை நிரப்பினார். ஆக, இயற்கையின் வழியாக தன்னுடைய கருணையை, இரக்கத்தை இறைவன் மக்கள் மீது அபரிவிதமாக பொழிகிறார். அவர்களின் முணுமுணுப்புகள், முறுமுறுப்புகளுக்கு மத்தியிலும் பொறுமையாக அவர்களை வழிநடத்துகிறார்.

இறைவனின் திட்டங்கள் ஆச்சரியத்தைத் தரக்கூடியவை. நம்மை தூய்மையான வாழ்விற்கு அழைத்துச் செல்லக்கூடியவை. அவரது வழியில் நாம் நடந்தால், என்றும் நமக்கு வெற்றியே. அவருடைய திருவுளத்தின்படி, நம்முடைய வாழ்வை அமைத்துக்கொண்டால், நிச்சயம் நம்முடைய வாழ்க்கை மகிழ்ச்சி அடையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.