ஆண்டவரே! நீர் என்னை அறிந்திருக்கிறீர்
திருப்பாடல் 139: 1 – 3, 4 – 6
ஒரு சில யூதப்போதனையாளர்களின் கருத்துப்படி, தாவீது எழுதிய திருப்பாடல்களில் இது தான், தலைசிறந்த பாடல். கடவுள் எங்குமிருக்கிறார். நம்மை அருகிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கடவுளின் பேராற்றலை எடுத்துரைக்கக்கூடிய பாடல் இந்த திருப்பாடல். கடவுள் அறியாதது ஒன்றுமில்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிற பாடல். நம் வாயிலிருந்து நாம் சொல்லப்போகிற வார்த்தைகளைக் கூட கடவுள் தெளிவாக அறிந்திருக்கிறார். கடவுளை முழுவதுமாக அறிந்தவராக வெளிப்படுத்தும் இப்பாடல், மனித அறிவின் எல்லையையும் கோடிட்டுக் காட்டுகிறது.
மனிதர்களாகிய நாம் நமது எல்லையை உணர வேண்டும். நம்முடைய அறிவு குறிப்பிட்ட எல்லைக்குரியது. கடவுளைப் பற்றி மனிதன் கூறும் பிரச்சனைகளுக்கு அடிப்படையே இங்கிருந்து தான் தொடங்குகிறது. நடக்கிற நிகழ்வுகளை நம்முடைய அறிவைக் கொண்டு தீர்வு காண முயற்சி எடுக்கிறோம். நாம் நினைப்பது போல நிகழ்வுகள் நடக்கவில்லை என்றால், கடவுளிடத்தில் கோபம் கொள்கிறோம். இந்த கோபம் கடவுளிடத்தில் வெறுப்புணர்வாக மாறுகிறது. ஏன் கடவுள் இப்படிப்பட்ட துன்பங்களை நமக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்வி எழுப்புகிறோம். படைத்தவரை படைப்பு கேள்வி கேட்கிறது. இந்த மனநிலையை மாற்றி, ஆண்டவரில் முழுநம்பிக்கை வைப்பதற்கு அழைக்கப்படுகிறோம்.
நம்முடைய பார்வை கடவுளைப் பற்றி எப்படி இருக்கிறது? துன்ப நேரத்தில் கடவுளின் துணை வேண்டி மன்றாடுகிறோமா? அல்லது கடவுளிடத்தில் கோபம் கொள்கிறோமா? இறைவனை முழுமையாக நம்பிடும் வரம் வேண்டி, இந்த திருப்பாடலை தியானிப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்