அடிமைத்தனமே விடுதலை

லூக் 1: 26 -38

பல அடிமைத்தனத்தை இந்த பூவுலகு கண்டுள்ளது. பல புரட்சிகளை இம்மானிடர்கள் கடந்து வந்துள்ளனர். எத்தனைப் புரட்சிகளும் வந்தாலும் மீண்டும் மீண்டும் மனிதகுலம் எதற்காகவாது அல்லது யாருக்காவது இன்றுவரை அடிமையாக இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் அடிமையாகத்தான் இருக்கிறோம் என்பதை மறக்க, மறைக்க இயலாது. அப்படியென்றால் அடிமைத்தனம் இவ்வுலகில் நிரந்தரமா? நம்மை நாம் விடுவிக்க இயலாதா? இத்தகைய கேள்விகளுக்கு விடையும், மாதிரியும் தான் இந்த பெருவிழா.

சாலையோரத்தில் நாயினைச் சங்கிலியில் பிடித்துக் கொண்டு செல்பவர்களைப் பார்த்து கேட்டால் அவர் நான் தான் என் நாயினை இழுத்துச் செல்கிறேன் என்றும், இந்த நாயினைத்தான் கழுத்தில் கட்டி என் கைக்குள் வைத்திருக்கிறேன் என்றும் கூறுவார். ஆனால், பல நேரங்களில் அவரைத்தான் அந்த நாய் தான் விருப்பட்ட இடத்திற்கெல்லாம் இழுத்து செல்கிறது. இதனைப் போலதான் நம் வாழ்வில் நாம் நினைக்கின்ற ஆசைகள், கனவுகள், திட்டங்கள், எல்லாம் நம் வாழ்வை அதனதன் வழிகள் இழுத்துச் செல்கின்றது. அவைகளுக்கு நாம் அடிமையாகவே வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவைகளுக்காக நம் தனிப்பட்ட விருப்புகளை விட வேண்டியுள்ளது, பெரிய வீடும், மகிழுந்து (ஊயச) வேண்டி வாழ்க்கை முழுவதும் நாம் கடனாளியாக, அடிமையாகத்தான் இருக்கிறோம். இந்த அடிமைத்தனத்தை நினைத்து ஏன், எதற்கு என்று கேள்விகளை கேட்க ஆரம்பிக்கும் முன்பு அந்த அடிமைத்தனத்தை நம் பிள்ளைகளின் தலையில் கட்டிவிட்டு நாம் இவ்வுகத்தை விட்டு கடந்து விடுகிறோம். அவ்வடிமைத்தனத்திலிருந்து விடுபட ஒரே வழி இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கின்ற மாதிரி அன்னை மரியாவினைப் போல, அவரில் நம்மை அடிமையாக்கிட வேண்டும். இவ்வுலக அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு அவரில் தஞ்சம் புரிவதே நலம். எளிதாக சொல்லவேண்டுமென்றால், அவரின் விருப்பத்தை தன் விருப்பமாக ஏற்றுக் கொள்ளவேண்டும். அவரில் நம் வாழ்வினை முழுமையாக ஒப்படைப்பதே உண்மையான விடுதலை. “இதோ ஆண்டவரின் அடிமை” என்ற அந்த வினாடியிலிருந்து அன்னை மரியா தன் வாழ்வின் முழுமையும், விடுதலையும் கண்டு கொண்டார்.

நாமும் இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட நம் வாழ்வின் பொருளை உணர, ஆண்டவரின் திருவுளத்திற்கு ‘ஆம்’ என்று கூறி நம்மை அடிமையாக்குவோம். விடுதலைப் பெறுவோம்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.