ஆணையிடுவதும் பலவீனமே
சட்டமியற்றி சமூகத்தின் தீமைகளை, தீயவர்களைக் கட்டுப்படுத்திவிடலாம் என்பது இயலாத காரியம். மேலும் மேலும் சட்டங்களை இயற்றினால தீமைகளும் தவறுகளும் தண்டனைகளும் குற்றவாளிகளும் பெருகுவார்களே அல்லாமல் நன்மை பெருகுவதற்கு வாய்ப்பு அதிகமாக இல்லை. ஆணையிடுதலும் இதற்குச் சமமானதே. ஏற்கெனவே உள்ள சட்டத்திற்கு இன்னொரு ஊன்றுகோல் தேடுகிறோம். ஆண்டவன் அருளால் நிறைந்த மனிதனுக்கு இப்படி இன்னொரு துணை தேவையில்லை. ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள்.
ஆணையிடுதல், இயலாமையின் அடையாளம். எவ்விதத்திலும் ஆற்றலும் அருகதையும் அந்தஸ்தும் நமக்கு இல்லாத நிலையில் நாம் இன்னொரு உயர்ந்த சாட்சியத்தைத் தேடுவது முறையல்ல. நம்மால் நம் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ முடியாது; கடவுளின் கால்மனையைக்கூட அணுக முடியாது.இந்த நிலையில் இறைவனை நமக்குச் சான்று பகர அழைப்பதற்கு என்ன தகுதி உள்ளது.இயேசுவின் காலத்தில் ஆணையிட்டுச் சொன்ன இரண்டு பேர் நிறைவேற்ற முடியாமல் போயினர். 1.ஏரோது(14:7), 2. பேதுரு26:72
ஆண்டவனின் மனிதன் ஒரு வார்த்தைக்குள் கட்டுப்பட்டவனாக இருக்கவேண்டும். வார்த்தையில் சுத்தம் உடையனாக இருக்க வேண்டும். வாக்கு மாறாதவன் என்ற பெயர் உடையவனே கிறிஸ்தவன். ஆணையிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை.ஒரு தடவை சொன்னால் நூறு தடவைச் சொன்னதுபோல.இந்த வாழ்கை முறை இருந்தால், ஆணையிட அவசிமில்லை; ஆயிரம் சட்டங்கள் தேவையில்லை. அருளில் நிறைந்திருந்தால் போதுமானது.இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.
~ அருட்திரு ஜோசப் லீயோன்