”ஆண்டவரே என் ஒளி”
திருப்பாடல் 27: 1, 3, 5, 8 – 9 ”இருளைப் பழிப்பதை விட ஒளியேற்றுவதே மேல்“ என்று பொதுவாகச் சொல்வார்கள். நாம் அனைவருமே இந்த உலகத்தில் நடக்கிற அநீதிகளைக் கண்டு பொங்கி எழுகிறோம். நமக்குள்ளாகப் பொருமிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த நிலையை மாற்றுவதற்கு நாம் ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்துவது கிடையாது. காரணம், நாமே அநீதி செய்யக்கூடியவர்களாகத்தான் இருக்கிறோம். நமக்கொரு நீதி, அடுத்தவர்க்கொரு நீதி என்று பேசக்கூடியவர்களாகத்தான் இருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் “ஆண்டவரே என் ஒளி“ என்கிற திருப்பாடலின் வரிகள், நமது வாழ்விற்கு ஒளி தருவதாக அமைந்திருக்கிறது. ஆண்டவரை எதற்காக திருப்பாடல் ஆசிரியர் ஒளிக்கு ஒப்பிட வேண்டும்? இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் ஒளி என்பது, கடவுளின் வல்ல செயல்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. கடவுள் இஸ்ரயேல் மக்களை வனாந்திரத்தில் பகலில் மேகத்தூணைக்கொண்டு அவர்களுக்கு நிழல் கொடுத்தார். இரவில் அவர்களுக்கு ஒளியாக இருந்து இருளிலிருந்து பாதுகாத்தார். கடவுளின் ஒளியை நாம் பெற்று, நாம் மற்றவர்களுக்கு...