கள்வர் குகையாக்கினீர்கள் !
எருசலேம் கோவிலுக்குள் இயேசு சென்று அங்கு விற்பனை செய்துகொண்டிருந்தோரைத் துரத்திய நிகழ்வு பரபரப்பான ஒன்று. இறைவேண்டலின் வீடாகிய எனது இல்லத்தைக் களவர் குகையாக்கி விட்டீர்கள் என்ற குற்றச்சாட்டுடன்தான் இயேசு அவர்களை வெளியே துரத்தினார். இந்நாட்களில் இயேசு நமது கோவிலுக்கு வந்தால், அதை எப்படிக் காண்பார்? இறைவேண்டலின் வீடாகவா? அல்லது வேடிக்கை, வினோதங்களின் அரங்கமாகவா? நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, திருமணங்கள் நடைபெறும் வேளைகளில் ஆலயம் படுகிற பாட்டை நாம் எப்படிப் பொறுத்துக்கொள்கிறோம் என்பது இறைவனின் இல்லத்தின்மீது நமக்குள்ள ஆர்வத்தின் அல்லது ஆர்வமின்மையின் அடையாளமாகவே அமைந்துவிடுகிறது. புகைப்படக்காரர்கள், வீடியோ எடுப்பவர்கள் கிராதியின்மீது காலைத் தூக்கிப்போட்டுத் தாண்டி வருகிறார்கள், குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள், பெரியவர்கள் சிரித்து, உரையாடிக்கொண்டிருக்கிறார்கள், மணமக்களோ தங்களின் கனவுலகில் இருக்கிறார்கள், சில வேளைகளில் குருக்களும்கூட பேசிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது இவை எதையுமே கண்டுகொள்ளாதவர்களாக இருந்துவிடுகிறார்கள். சில வேளைகளில் நாயோ, ஆடோ ஆலயத்திற்குள் நுழைந்துவிடுகிறது. யாரும் அதைக் கண்டுகொள்வதில்லை. நமது ஆலயங்கள் மாசுபடுவதைப்...