ஆண்டவரே உமது பெயர் எவ்வளவு பெயர் மேன்மையாய் விளங்குகின்றது
திருப்பாடல் 8: 1a, 4, 5 – 6, 7 – 8 கடவுளைப்பற்றியும், அவரது படைப்பின் மேன்மையைப் பற்றியும் உள்ளத்தில் ஆழமாக சிந்தித்த ஒரு மனிதரின் கூக்குரல் தான், இந்த திருப்பாடல். கடவுள் எந்த அளவுக்கு மாட்சிமையும், வல்லமையும் உடையவராய் இருக்கிறார் என்பதை, நாம் அவரைப்பற்றி சிந்தித்தால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். வெறுமனே படைப்புக்களை மேலோட்டமாக பார்த்தால், கடவுளின் மாட்சிமையை நாம் புரிந்து கொள்ள முடியாது. நேர்த்தியாகப் படைக்கப்பட்ட பறவையினங்கள், விலங்குகள், மரங்கள், அவைகளுக்கு உணவு வழங்கும் விதம், என்று ஒவ்வொன்றையும் நாம் இரசிக்கிறபோது, அதன் அழகைப் பருகுகிறபோது, கடவுளின் மேன்மையை நாம் உணர்ந்து கொள்ளலாம். கடவுளின் ஞானம் மனிதர்களோடு ஒப்பிடப்பட முடியாத ஒன்று. ஒவ்வொன்றையும் அவர் செதுக்கி வைத்திருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் ஒரு வடிவம் தந்திருக்கிறார். அது இயல்பாகவே இயங்குவதற்கு ஆற்றல் வழங்கியிருக்கிறார். படைப்புக்களையும், அவற்றின் மேன்மையையும் பேசுகின்ற திருப்பாடல் ஆசிரியர், படைப்பின் சிகரமாக இருக்கக்கூடிய மனிதர்களின் பெருமைகளையும்...