”நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்” (லூக்கா 11:52)
இயேசு பரிசேயரையும் மறைநூல் அறிஞரையும் மிகக் கடுமையாகக் கண்டித்துப் பேசிய பகுதி (காண்க: லூக்கா 11:37-54) பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ”ஐயோ! உங்களுக்குக் கேடு!” என்று இயேசு கூறுவது இயேசுவின் சாந்தமான குணத்திற்கு நேர்மாறாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், இயேசு கண்டிப்பது அக்கால சமய, மற்றும் சமூகத் தலைவர்களிடம் காணப்பட்ட குறைகளை மட்டுமல்ல, மாறாக அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட நேரிய நடத்தை என்னவென்பதையும் இயேசு உணர்த்துகிறார். அதே நேரத்தில், இயேசு கண்டித்த குறைகளும் அவர் போற்றியுரைத்த நடத்தையும் இன்று வாழ்கின்ற நமக்கும் பொருந்தும். தாமும் நுழையாமல் பிறரையும் நுழையவிடால் செயல்படுவது எதைக் குறிக்கிறது? வீட்டு வாசலில் ஒருவர் நிற்கிறார் என வைத்துக்கொள்வோம். ஒன்றில் அவர் வீட்டுக்குள் நுழைய வேண்டும் அல்லது வாயிலை அடைத்துக்கொண்டு நிற்காமல் அங்கிருந்து வெளியேறிட வேண்டும். அப்போது வீட்டுக்குள் பிறர் நுழைய முடியும். இதையே இயேசு ஓர் உருவகமாகக் கொண்டு இறையாட்சி பற்றிய ஆழ்ந்த உண்மையை விளக்குகிறார். நுழைதலும் நுழையவிடுதலும்...