இறைவல்லமை
திருத்தூதர் பணி 11: 19 – 26 ஸ்தேவான் கொலை செய்யப்பட்ட பிறகு, நிச்சயம் இயேசுவைப் பற்றி போதிக்கிறவர்கள் தங்களின் உயிருக்குப் பயப்படுவார்கள் என்று அதிகாரவர்க்கத்தினர் நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எவ்வளவுக்கு அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்களை துன்புறுத்தினார்களோ, அதற்கு மேலாக கிறிஸ்துவைப் பற்றிய போதனை, மக்களுக்கு கொடுக்கப்பட்டது. அதற்கு காரணமாக, இன்றைய முதல் வாசகம் நமக்கு சொல்வது, ”அவர்கள் ஆண்டவரின் கைவன்மையைப் பெற்றிருந்தனர்”. இயேசுவைப் பற்றி போதித்தவர்கள் மிரட்டலுக்கு அஞ்சாமல், தங்கள் உயிரைப் பற்றிய கவலை கொள்ளாமல், மக்களுக்கு கிறிஸ்துவை அறிவித்தனர் என்றால், அதற்கு காரணம், இறைவனின் வல்லமை தான். இயேசுவின் சீடர்கள் படிக்காத பாமரரர்கள். இயேசு தான் அவர்களை வழிநடத்தினார். இயேசுவைக் கொலை செய்தபோது, அதிகாரவர்க்கத்தினர் சீடர்களை எளிதாக அச்சுறுத்தி சமாளித்து விடலாம் என்று நினைத்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே, இயேசுவின் இறப்பிற்கு பிறகு, சீடர்கள் அறைகளில் தங்கி ஒளிந்து கொண்டிருந்தனர். ஆனால், இயேசுவின் உயிர்ப்பு...