தூய ஆவியின் வழிநடத்துதல்
ஒரு குடும்பத்தில் பலர் இணைந்து வாழ்வது என்பது எளிதானது அல்ல. அது சவாலானது. நம்முடைய எதிர்பார்ப்புகள், எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாமே வெவ்வேறானது. எனவே, கூடி வாழ்கிற வாழ்க்கை முறை மிக மிக கடினமானது. ஆனால், கிறிஸ்தவ அழைப்பு என்பது, அப்படிப்பட்ட வேறுபாடுகளைக் களைந்து விட்டு, ஒற்றுமையாக வாழ முயற்சிக்கிற வாழ்க்கை முறையேயாகும். அப்படி வாழ்கிறபோது, நாம் என்னென்ன பண்புகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று பவுலடியார் கூறுகிறார். நம்மிடத்தில் மனத்தாழ்ச்சி இருக்க வேண்டும். அகம்பாவம், கர்வம், செருக்கு இல்லாத தாழ்ச்சியே இதனுடைய பொருளாகும். எவ்வளவு பிணக்குகளும், வெறுப்பும் வந்தபோதிலும், கனிவோடும், பொறுமையோடும், ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவியில் நாம் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும். இப்படி நாம் ஒன்றாக வாழ்வதற்கு அடிப்படைக் காரணம் என்ன? நாம் கொண்டிருக்கிற நம்பிக்கை. நாம் பெற்றிருக்கிற நம்பிக்கை ஒரே நம்பிக்கை. நாம் பெற்றிருக்கிற திருமுழுக்கு ஒரே மாதிரியானது. எனவே, நம் அனைவருக்கும் தந்தையும்...