காணாமல் போன நாம் !
இறைவனைவிட்டுப் பிரிந்து காணாமல் போய்விடுகின்ற இஸ்ரயேல் மக்களையும், அவர்களின் வழிமரபினரான நம்மையும் இறைவன் மீண்டும், மீண்டும் தேடிவருகிறார் என்பதை இன்றைய ஞாயிறு வழிபாட்டின் வாசகங்கள் நினைவுபடுத்துகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள்மீது இறைவன் கோபம் கொண்டு, அவர்களை அழிக்கத் திட்டமிடுவதையும், மோசே அவர்களுக்காகப் பரிந்துபேசும்போது, இறைவன் தம் மனத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்கு செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார் என்று வாசிக்கிறோம். இறைமக்களின் மனநிலை, இறைவனின் மனநிலை இரண்டையும் அருமையாகச் சித்தரிக்கும் வாசகம் இது. இறைமக்களின் உள்ளம் கடினமானது. நன்றி மறந்தது. இறைவன் செய்த வியத்தகு செயல்கள் அனைத்தையும் மறந்து, வேற்று தெய்வங்கள்பால் செல்வது. எனவேதான், இறைவன் கூறுகிறார்: இம்மக்களை எனக்குத் தெரியும். வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள்?. இன்றைய நாள்களிலும் நாமும் வணங்காக் கழுத்துள்ளவர்களாக, இறைவனை மறந்து, உலக இன்பங்கள், உலகப் பொருள்கள், களியாட்டங்களில் ஆர்வம் கொண்டு, இறைவனை மறந்து, பிறதெய்வங்களை நாடிச் செல்லும் இனமாக இருக்கிறோம்....