கடவுளின் முடிவில்லா ஆட்சி
சதுசேயர்கள் பலவற்றை யூத மதத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அறியப்படுவது உயிர்த்தெழுதலை வைத்துதான். உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாமை தான், சதுசேயர்களின் அடையாளமாக இருந்தது. சதுசேயர்களும் யூத மதத்தின் ஒரு பிரிவினர் தான். ஆனால், பரிசேயர்கள் அவர்களை அப்படி ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அவர்கள் உயிர்த்தெழுதலை நம்பியவர்கள். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. பரிசேயர்கள் விவிலியத்தை கடவுளின் வார்த்தையாகவே முழுமையாக நம்பியதால், உயிர்த்தெழுதல் உண்டு என்றே நம்பினர். லூக்கா நற்செய்தியாளர் இயேசு வழியாக இந்த உவமையைச் சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. யூதர்கள் உரோமையர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தபோது கி.பி முதல் நூற்றாண்டிலும், எருசலேமையும், அதன் ஆலயத்தையும் அழித்தபோது, ஆயிரக்கணக்கான யூதர்கள் கணக்கின்றி கொல்லப்பட்டனர். உரோமையர்களின் கொலைவெறித்தாக்குதலில் இறந்தவர்கள் கடவுளின் வாக்குறுதிப்படி உயிர்த்தெழுவார்கள் என்கிற நம்பிக்கையை நற்செய்தியாளர் அந்த மக்களுக்கு விதைக்கிறார். இது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைக் கொன்றழித்து விட்டோம் என்று கொக்கரித்துக்கொண்டிருந்த உரோமையர்களுக்கும் சவுக்கடி கொடுக்கும்விதமாக எழுதப்படுகிறது. கடவுள் தன் மக்களுக்கு வாக்களித்த...