நம்பிக்கையின்மையை நீக்க உதவும்
தீய ஆவி பிடித்திருந்த இளைஞனின் தந்தை இயேசுவை நோக்கி, “உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவுகொண்டு எங்களுக்கு உதவி செய்யும்” என்று வேண்ட, இயேசு அவரை நோக்கி, “இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்” என்று சொல்ல, அச்சிறுவனின் தந்தை “நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்” என்று கதறினார். இயேசு அவரைக் குணமாக்கினார். அந்தச் சிறுவனின் தந்தையைப் போன்ற மனநிலையே நம்மிலும் இருக்கலாம். அப்படியானால், அவரைப் போன்றே நாமும் மன்றாட வேண்டும். பல நேரங்களில் நமது விசுவாசம், இறைநம்பிக்கை நிறைவானதான, முழுமையானதாக இல்லை. எனவேதான், இறைவனின் நன்மைத்தனத்தை, பேரன்பை நாம் சந்தேகிக்கிறோம். எனவே, நாமும் நமது நம்பிக்கையின்மை நீங்க உதவவேண்டும் என்று இறைவனிடம் மன்றாட வேண்டும். மேலும், இறைநம்பிக்கை என்பதே இறைவனின் ஒரு கொடைதான் என்பதையும் இந்நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது. அவரது அருளின்றி, இறைவன்மீது நாம் நம்பிக்கை கொள்ள முடியாது, அவரை அப்பா, தந்தாய் என்று அழைக்கவும் முடியாது....