ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்
திருப்படல் 145: 1 – 2, 8 – 9, 10 – 11 ”அனுபவமே சிறந்த ஆசான்” என்று பொதுவாகச் சொல்வார்கள். திருப்பாடல் ஆசிரியரின் இந்த வரிகள், அவருடைய அனுபவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அறியாததை, தெரியாததை கற்றுக்கொடுப்பது தான் அனுபவம். இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்று அனுமானத்தின் அடிப்படையில் பல நிகழ்வுகள் நம்முடைய வாழ்க்கையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த அனுமானத்தை உறுதிப்படுத்துவதுதான் அனுபவம். திருப்பாடல் ஆசிரியருடைய அனுபவம் என்ன? அவருடைய அனுபவத்திற்கும், இன்றைய திருப்பாடலுக்கும் என்ன தொடர்பு? ”ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்” என்பதுதான் திருப்பாடல் ஆசிரியரின் அனுபவம். அவருடைய அனுமானம் இதுவரை, கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமே என்பதாக இருந்திருக்கிறது. அந்த அனுமானத்தின் அடிப்படையில் தான், அவரும் வாழ்ந்திருக்கிறார். ஏனென்றால், இஸ்ரயேல் கடவுளின் விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்று அவருடைய முன்னோர்கள் வழியாக கேள்விப்பட்டிருக்கிறார். அந்த நம்பிக்கையோடு தான், அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவருடைய அனுமானம் சரியானதல்ல...