ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் ஆசி பெற்றவர்
திருப்பாடல் 128: 1 – 2, 3, 4 – 5 கடவுளுக்கு அஞ்சி வாழ்வது என்றால் என்ன? என்பது பற்றி, பல திருப்பாடல்கள் நமக்கு விளக்கமாகச் சொல்லியிருக்கிறது. இந்த திருப்பாடல் கடவுளுக்கு அஞ்சி வாழ்வதனால், பெறக்கூடிய நன்மைகளை சிறப்பாக எடுத்துரைக்கிறது. இந்த உலகத்தில் வாழக்கூடிய சாதாரண மனிதரின் என்னவாக இருக்கும்? தான் நன்றாக இருக்க வேண்டும். தன்னுடைய குடும்பத்தை நன்றாக வாழ வைக்க வேண்டும். தன்னோடு இருக்கிறவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இது தான் அடிப்படையில், சாதாரணமான ஒரு மனிதனின் எண்ணமாக இருக்கிறது. இந்த எண்ணங்கள் எல்லாம், கடவுளுக்கு அஞ்சி வாழ்கிறபோது செயல்வடிவம் பெறுகிறது. கனி தரும் திராட்சைக்கொடி என்பது வளமையை, செழிப்பைக் குறிக்கிறது. நிறைவான விளைச்சலைக் குறிக்கிறது. எதை எதிர்பார்த்து பயிரிடப்படுகிறதோ, அது நிறைவேறியதைக் குறிக்கிறது. திராட்சைச் செடி பலன் தர வேண்டும் என்கிற எண்ணத்தோடு தான், பயிரிடப்படுகிறது. அது பலன் தருகிறபோது, உண்மையிலே சிறப்பான மகிழ்ச்சி ஏற்படுகிறது....