என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்
திருப்பாடல் 130: 1 – 2, 3 – 4, 7 – 8 குற்றவுணர்வுள்ள நிலையில் பாடப்படும் பாடல் தான் இந்த திருப்பாடல். ஆண்டவரிடத்தில் ஒரு வேண்டுதலுக்காக ஆசிரியர் செபிக்கிறார். ஆனால், அவர் கண்முன்னே இறைவனை புறக்கணித்து அவர் செய்த தவறுகள் நின்று கொண்டிருக்கின்றன. பொதுவாக, ஒரு மனிதர் நமக்கு கடினமான நேரத்தில் உதவி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த உதவியைப் பெற்று நாமும் நல்ல கஷ்டத்திலிருந்து மீண்டு வருகிறோம். அதன்பிறகு அந்த மனிதரை நாம் பார்க்கவுமில்லை, செய்த உதவிக்கு நன்றி செலுத்தவும் இல்லை. மீண்டும் இப்போது நமக்கு உதவி தேவைப்படுகிறது. அவருடைய உதவியைக் கேட்க வேண்டிய நிலை. நம்முடைய உள்ளம் எப்படி இருக்கும்? கிட்டத்தட்ட இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை தான் திருப்பாடல் ஆசிரியருக்கும். கடவுளிடத்தில் ஏராளமான உதவிகளைப் பெற்றிருக்கிறார். அவர் எதிர்பாராமலே ஆபத்திலிருந்து பாதுகாத்திருக்கிறார். இவ்வளவு நன்மைகளைப் பெற்ற பிறகு, அவர் கடவுளுக்கு உண்மையில்லாமல் வாழ்ந்திருக்கிறார். கடவுளை...