கடவுளே என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு
திருப்பாடல் 119: 89 – 90, 91 & 130, 135 & 175 கடவுளின் வாக்கு என்றென்றும் இந்த உலகத்தில் உள்ளது என்று இந்த திருப்படல் நமக்கு சொல்கிறது. வாக்கு என்பதை நாம் எப்படி புரிந்து கொள்ளலாம்? வாக்கு என்பதை நாம் வார்த்தை என்கிற பொருளில் அர்த்தப்படுத்தலாம். தொடக்கத்தில் கடவுள் இந்த உலகத்தைப் படைத்தபோது, ”ஒளி உண்டாகுக” என்று சொல்கிறார். உடனே அங்கு ஒளி தோன்றிற்று. ஆக, ஆண்டவரது வார்த்தை புதிய உலகத்தைத் தோற்றுவித்தது. இந்த உலகமே கடவுளின் வார்த்தையால் உருவானது. இயேசுவின் பிறப்பைப்பற்றி யோவான் சொல்கிறபோது, “வாக்கு மனுவுருவானார்” என்று சொல்கிறார். கடவுளின் வார்த்தை இயேசுவில் மனித உருவம் எடுக்கிறது. ஆக, கடவுளின் வாக்கு என்பது, இறைவனோடு ஒப்பிடப்படுகிற வார்த்தையாக இருக்கிறது. ”என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு” என்பது, இறைவன் நம்மில் ஒருவராக, நம்மோடு இயற்கையின் வடிவத்திலும், இறைவார்த்தையின் வடிவத்திலும், கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட மனிதர்களின் வடிவத்திலும் இருக்கிறார்...