உயிர்த்த இயேசு தரும் சமாதானம்
யூதர்களுக்கு அஞ்சி சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தனர். சீடர்கள் தங்கியிருந்த அறை, இயேசுவோடு கடைசி இரவு உணவு உண்ட அறையாக இருக்கலாம். அவர்கள் இருந்தது மேல் அறை. யூதர்களின் கோபம், வெறுப்பு முதலானவை சீடர்களுக்கு நன்றாகத்தெரியும். இயேசுவை ஒழித்தாயிற்று. இனி எப்படியும், அடுத்த இலக்கு தாங்கள்தான் என்பது அவர்களுக்கு நன்றாகத்தெரியும். எந்தநேரமும் தலைமைச்சங்க காவலர்கள் வந்து தங்களை கைது செய்யலாம் என்று நினைத்தனர். எனவே, மேலறையிலிருந்து அவர்களுக்கு கேட்கும் ஒவ்வொரு சத்தமும், அவர்களின் இருதயத்தை கலங்கடித்துக்கொண்டிருந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் உயிர்த்த இயேசு அவர்களுக்குத் தோன்றுகிறார். உயிர்த்த இயேசு அவர்களுக்கு சொல்லும் செய்தி: உங்களுக்கு அமைதி உண்டாகுக!. கலங்கிப்போயிருந்த சீடர்களின் கலக்கத்தை இயேசு அறியாதவரல்ல. அவர்களின் வேதனையை இயேசு உணராதவர் அல்ல. அவருக்கு சாவின் பயம் நன்றாகத்தெரியும். ஏனென்றால், சாவை எதிர்நோக்கியிருந்த அவரே, கெத்சமெனி தோட்டத்தில், திகிலும் மனக்கலக்கமும் அடைந்திருந்தார். ‘எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது’...