மகிழ்ச்சியும், அன்பும்
எதை விதைக்கிறோமோ, அதையே அறுவடை செய்கிறோம், என்ற சொல்லாடல் நம் மத்தியில் பேசப்படுவதுண்டு. செயல்பாட்டை விட, அடுத்தவா் செய்கிறவற்றைப்பற்றிப் பேசுவதே நம்மில் அதிகமாகக் காணப்படுகிறது. இன்றைய உலகின் பிரச்சனைகளுக்கு அதிகமாகச் சொல்லப்படுவது, மற்றவர்களைப்பற்றிய தேவையில்லாத பேச்சு. வீண் விமர்சனங்களும், அடுத்தவரைப்பற்றிய தரக்குறைவான எண்ணங்களும் தான், நமது வாழ்வை சீர்குலைக்கக்கூடியவையாக, நம்மை கடவுள் முன்னிலையில் குற்றவாளியாக மாற்றக்கூடியவையாக இருக்கிறது. இன்றைய நற்செய்தியும் இதைத்தான் வலியுறுத்திக்கூறுகிறது. நாம் அனைவரும் நம்மையும், நமது வாழ்வையும் விமர்சனத்துக்கு உள்ளாக்க வேண்டுமேயன்றி, மற்றவர்களை விமர்சனத்திற்கு உள்ளாக்கக்கூடாது. கடவுள் கொடுத்த இந்த வாழ்வை எப்படி வாழ வேண்டும்? என்பதைத்ப்பற்றித்தான் கவலைப்பட வேண்டுமே தவிர, மற்றவர்களை விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்பது, நமது எண்ணமாக இருக்கக்கூடாது. அடுத்தவர்களை ஏளனமாகப்பார்ப்பதும், தங்களை உயர்வாகவும் எண்ணிக்கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்த இயேசுவின் போதனை, நமக்கும் மிகப்பெரிய சாட்டையடி. நாமும் இதே மனநிலையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிறரை அன்பு செய்வதும், அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்வதும்...