பகிர்ந்து வாழ்வோம்
”இருப்பதிலிருந்து தான், நாம் மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்”. இதனை கிராமப்புறங்களில், ”சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்” என்று, நாட்டுப்புற வழக்கில் கூறுவார்கள். இன்றைய நற்செய்தியும், ”உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்” என்று, இதனை அடியொற்றி சொல்கிறது. நாம் அனைவருமே மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காகப் பிறந்தவர்கள். இயற்கை அன்னையைப் பார்த்தால் அந்த உண்மை நமக்குத் தெரியவரும். அருவி, மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்துமே மற்றவருக்குக் கொடுப்பத்தில் நிறைவைப் பெறுகிறது. எந்த மரமும் அதன் கனியை, தானே உண்பதில்லை. பறவைகளும், விலங்குகளும் மனிதர்களும் பயன்பெறுவதற்காகவே அதைக் கொடுக்கிறது. மனிதர்களும் இயற்கை அன்னையின் பிள்ளைகள் தான். அவர்களும் அன்னையைப்போல தங்களின் வாழ்வில் மற்றவர்களுக்குக் கொடுத்து, அதில் நிறைவைக்காண அழைக்கப்படுகிறார்கள். எனவே, நாமும் மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காகவே, கொடுத்து வாழ்வதற்காகவே அழைக்கப்படுகிறோம். இன்றை நற்செய்தியும் இதனைத்தான் வேறுவார்த்தைகளில் சொல்கிறது. நாம் கொடுப்பது முதன்மையான காரியம். நாம் கொடுப்பது நல்லதாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்குப் பயன்படுவதாக இருக்க வேண்டும். எத்தனையோ மரங்கள்...