கடவுளின் பராமரிப்பில் வாழ்வோம்
ஆலயத்தின் பெண்களுக்கான இடத்தினருகே, 13 காணிக்கைப்பெட்டிகள் அமைக்கப்பட்டிருந்தது. எக்காளம் போன்ற அமைப்பில் அவைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனுடைய மேற்புறம் குறுகியும், கீழ்ப்புறம் அகன்றும் காணப்பட்டிருந்தன. ஒவ்வொரு காணிக்கைப்பெட்டிகளும் ஒவ்வொரு நோக்கத்திற்கானவை. ஆலயத்தில் பலிபொருட்களை எரிப்பதற்குப் பயன்படும் விறகுகளை வாங்க, ஆலயப்பொருட்களை பராமரிக்க, நறுமணப்பொருட்கள் வாங்க என்று பல தேவைகள் ஆலயத்திற்கு இருந்தன. அவற்றை நிறைவேற்ற, இந்தக்காணிக்கைப் பயன்படுத்தினர். இயேசு இந்தக்காணிக்கைப்பெட்டிகள் இருந்த இடத்திற்கு அருகே அமர்ந்திருக்கிறார். செல்வந்தர்களும் காணிக்கைப் போடுகின்றனர், ஏழைக்கைம்பெண்ணும் காணிக்கைப் போடுகின்றார். செல்வந்தர்கள் அதிக பணத்தைக் காணிக்கையாக செலுத்துகின்றனர். ஏழைக்கைம்பெண்ணோ, தன் பிழைப்பிற்காக வைத்திருந்த அனைத்தையுமே போட்டு விடுகிறாள். அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்யப்போகிறேன்? என்பது தெரியாது. யாராவது எனக்கு உதவுவார்களா? அவளுக்கு தெரியாது. ஆனால், கடவுளின் பராமரிப்பில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் அவளின் அந்தக்காணிக்கை. அவளின் நம்பிக்கை பணத்தில் அல்ல, கடவுளின் பராமரிப்பில். இந்த இரண்டு காசுகளும் கடவுள் எனக்குத்தந்தது. அதைக்கடவுளுக்கே காணிக்கையாக்குகிறேன் என்று,...