இறைவார்த்தையின் மீதுள்ள தாகம்
யோவான் தன்னுடைய சீடர்களை அனுப்பி, இயேசு தான் மெசியாவா? என்று கேட்டுவரச் சொல்கிறார். இந்த பகுதி சில சந்தேகங்களையும் எழுப்புகிறது. இயேசு செய்த புதுமைகளைப் பார்த்து சாதாரண மக்களும் அவரை மெசியாவாக நம்பிக்கொண்டிருக்கும்போது, யோவான் எப்படி புரிந்து கொள்ள முடியாமல் போக முடியும்? இருந்தபோதிலும், ஒரு சில விளக்கங்கள் இதற்கு சரியான தீர்வாக அமையும். திருமுழுக்கு யோவானுக்கு, இயேசு தான் மெசியா என்று தெரிந்திருந்தாலும், மற்றவர்கள் உணர்வதற்காக அவர்களை அனுப்பியிருக்கலாம். அதுபோல், மற்றொரு விளக்கமும் தரப்படுகிறது. யோவான் சிறைக்கம்பிகளுக்கு உள்ளே இருந்ததால், எக்காரணத்தைக் கொண்டும், மக்கள் இறையாட்சி பற்றிய செய்தி அறியாமல் இருக்கக்கூடாது, என்று மக்கள்பால் கொண்டிருந்த அன்பு, அவரை இந்த கேள்வியைக் கேட்கத் தூண்டியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. திருமுழுக்கு யோவான், மக்கள் மீது வைத்திருந்த அளவுகடந்த பாசத்தை இது வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்கிற தாகம், திருமுழுக்கு யோவானுக்கு சாகும்தருவாயில் கூட இருந்தது. மக்கள் நற்செய்தி இல்லாமல்...