”ஆண்டவரே! உம்மிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்
திருப்பாடல் 2: 1 – 3, 4 – 6, 7 – 9 கடவுள் தான் இஸ்ரயேல் மக்களை ஆள்வதற்காக தாவீதைத் தேர்ந்தெடுத்தார். தாவீது எருசலேமில் இஸ்ரயேல் மக்களை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால், வேற்றுநாட்டினர் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக போர்தொடுக்கின்றனர். இந்த போர், இஸ்ரயேல் மக்களுக்கு எதிரானதோ, தாவீதுக்கு எதிரானதோ அல்ல. இது கடவுளுக்கு எதிரான போர். ஏனென்றால், இஸ்ரயேல் மக்களைத் தாக்குவது கடவுளையே தாக்குவது போலானதாகும். ஏனென்றால், எப்போது தாவீது இஸ்ரயேல் மக்களின் அரசனாக மாறினாரோ, அப்போதே அவர், கடவுளின் மைந்தனாக மாறிவிட்டார். எனவே, இனி கடவுளின் அருட்கரம் தான், அவரைப் பாதுகாக்கப் போகிறது. இந்த திருப்பாடல் இயேசுவின் வருகையைக் குறிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. இயேசு எப்படியெல்லாம் கடவுளால் பேணிப் பாதுகாக்கப்பட போகிறார். இயேசுவின் வாழ்க்கை எவ்வளவு சவால்களுக்கு மத்தியில் இருக்கப்போகிறது என்கிற, எதிர்காலத்தில் நடக்க இருக்கிற நிகழ்வுகளையும் இந்த திருப்பாடல் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. எவ்வளவு சோதனைகள்...