உண்மை வெல்லும்
இயேசுவை ஒழித்துக்கட்டுவதற்கு அதிகாரவர்க்கம் எத்தனையோ முயற்சிகளை எடுத்தது. இயேசுவை சதிவலையில் சிக்கவைப்பதற்கு சதித்திட்டங்களைத் தீட்டினர். சட்டத்திற்கு எதிராகப்பேசுகிறான் என்ற பொய்க்குற்றச்சாட்டுக்களைக் கூறினர். கடவுளை நிந்திக்கிறான் என்ற பழிபோடப்பட்டது. இவ்வளவு முயற்சிகள் செய்து, இயேசு என்ற ஒரு மனிதரை ஒழிப்பதற்கு அவர்கள் எடுத்த முயற்சிகளுக்கு ஓரளவு பலனும் கிடைத்தது. அவர்கள் நினைத்தது போலவே அவரை சிலுவையில் அறைந்து கொன்றாயிற்று. அவ்வளவுதான் ஒழிந்தான் என்று அவர்களால் நிம்மதியாகவும் இருக்கமுடியவில்லை. உயிரோடு மற்றவர்களை எழுப்பியவன், உயிரோடு வந்துவிடுவானோ? என்ற படபடப்பு, பதைபதைப்பு அவர்கள் மத்தியில் மீண்டும் எழுந்தது. அவர்கள் பயப்பட்டது போலவே நடந்தும் விட்டது. இருந்தாலும், இவ்வளவு செய்தவர்கள் இதை மட்டும் அப்படியே விட்டுவிடுவார்களா என்ன? மீண்டும் ஒரு பொய்யைக்கூறி, இயேசுவின் வாழ்வை கல்லறையோடு மூடிவிட முனைகிறார்கள். ஆனால், எவ்வளவுதான் பொய்களை அவிழ்த்துவிட்டு, உண்மையை மூடிமறைத்தாலும், இறுதிவெற்றி உண்மைக்குத்தான் என்பதை இன்றைய வாசகம் நமக்கு தெளிவாக்குகிறது. தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மீண்டும் வெல்லும்...