விசுவாசம் – கடவுளின் கொடை
இயேசு கடவுளின் நற்செய்தியை உலகெங்கும் எடுத்துச்செல்ல திருத்தூதர்களை தேர்ந்தெடுக்கிறார். இயேசுவின் இந்த செயல், விசுவாசம் என்பது போற்றிப்பாதுகாக்க வேண்டியது மட்டுமல்ல, அது பறைசாற்றப்பட வேண்டியது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
கத்தோலிக்க திரு அவை இரண்டாயிரம் வருடத்திற்கும் மேலான பாரம்பரியத்தைகொண்டு இருக்கிறது. இந்த இரண்டாயிரம் வருட பாரம்பரியத்தின் வெற்றி, ஒவ்வொரு தலைமுறையினரின் அர்ப்பணத்திலே இருந்திருக்கிறது. அன்றைக்கு சீடர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட விசுவாசத்தை அர்ப்பண உணர்வோடு தலைமுறையினர் தோறும் அடுத்த தலைமுறையினர்க்கு மிகுந்த பாதுகாப்போடு, மகிச்சியோடு, தியாக உள்ளத்தோடு பரிமாறியிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் சந்தித்த துன்பங்கள், துயரங்கள், கொடுமைகள் எண்ணிலடங்காதவை. ஆனாலும், தாங்கள் பெற்றுக்கொண்ட அந்த மாட்சிமையை, உண்மையை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தாங்கள் சந்தித்த இன்னல்களை பொறுமையோடு ஏற்றுக்கொண்டார்கள். இதற்கு சிறந்த உதாரணம் திருத்தூதர்கள். திருத்தூதர்கள் அனைவரும் இயேசுவுக்காக சிந்திய இரத்தம் அதற்கு சாட்சி.
இன்றைக்கும் நாம் பெற்றிருக்கிற இந்த பாரம்பரியமான விசுவாசத்தை சிதைக்காமல் எந்தச்சேதாரமும் இல்லாமல் அடுத்த தலைமுறையினருக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. குறிப்பாக பொய்யையும், புரட்டையும், மாயத்தோற்றத்தையும் கல்வியறிவில்லா மக்கள் மனதில் விதைத்து, சாதாரண மக்களின் விசுவாசத்தில் குழப்பம் செய்து, குழம்பிய குட்டையில் மீன்களை தேடும் வேலை செய்கின்ற பிரிவினைச்சபைகளிடமிருந்து இந்த பாரம்பரியமான விசுவாசத்தை பாதுகாத்து, பறைசாற்றக்கூடிய பொறுப்பை உணர்வோம். சிலை வழிபாடு, அன்னைக்கு வணக்கம், நற்கருணையில் இறைப்பிரசன்னம் போன்ற நம்முடைய விசுவாச வடிவங்களை சிதைக்க நினைப்பவர்களுக்கு இறைவார்த்தையின் துணைகொண்டு பதிலடி கொடுப்பது, ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமை என்பதை உணர்வோம்.
~அருட்பணி. தாமஸ் ரோஜர்