வாய்ப்புக்களைப் பயன்படுத்துவோம்
இன்றைய நற்செய்தியை (+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 21-30) நாம் வாசிக்கிறபோது, இயல்பாகவே ஏழை இலாசர் உவமையில் வரும் செல்வந்தனின் நிலை நமக்கு நினைவுக்கு வருகிறது. இயேசு சொல்கிறார், ”நான் போன பின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்”. இழந்த வாய்ப்புகளை நாம் திரும்பப்பெற முடியாது, என்று பொதுவாகச் சொல்வார்கள். கிடைக்கிற வாய்ப்பைப்பயன்படுத்தி, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் நமக்கு வருகிற அழிவை யாராலும், தடுக்க முடியாது.
ஏழை இலாசர் உவமையில், அந்த செல்வந்தன் தனது சகோதரர்களுக்காக இலாசரை திரும்ப அனுப்புவதற்கு, ஆபிரகாமிடம் மன்றாடுகிறார். ஆனால், ஆபிரகாமோ அவர்களை வழிநடத்துவதற்கு இறைவாக்கினர்கள் இருப்பதாகக்கூறுகிறார். அப்படி செவிசாய்க்காதவர்கள் யாருக்கும் செவிசாய்க்க மாட்டார்கள் என்றும், அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதாகவும் நாம் புரிந்து கொள்ளலாம். கடவுள் நமக்கு நாம் திருந்தி வாழ்வதற்கு பல வாய்ப்புகளைத் தருகிறார். அந்த வாய்ப்புக்களை இழந்தபிறகு அதனை நினைத்து வருந்த முடியாது. கொடுக்கப்படுகிற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி நல்லமுறையில் நாம் நமது வாழ்வை அமைத்துக்கொள்வோம்.
இந்த உலகவாழ்க்கையில் நமது வாழ்வை திரும்பிப்பார்த்து, திருந்திவாழ்வதற்கு இயலாத அளவிற்கு நாம் பல பணிகளுக்குள்ளாகச் சிக்குண்டிருக்கிறோம். ஆனாலும், நாம் நமது வாழ்வைப்பற்றி தியானிப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். குறிப்பாக, இந்த தவக்காலம் நமது வாழ்வை எண்ணிப்பார்த்து, சரியான பாதையில் நடப்பதற்குத் தூண்டுகின்ற காலம். இதனை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்