வந்து பாருங்கள்! வியந்து போவீர்கள்!
04.01.2023 – யோவான் 1: 35 – 42
புதிதாக வேலைக்கு ஒரு நிறுவனத்திற்கு செல்லும் முன், ஏற்கெனவே அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளரிடம் நிறுவனம் எப்படி இருக்கும் என்று விசாரித்தால் ‘வந்து பாருங்கள்’ என்பது அவர்களின் பதிலாக இருக்கும். புதிதாக கல்லூரியில் பயிலும் முன், அந்த கல்லூரியில் படிக்கும் மாணக்கரிடம் கல்லூரி எப்படி இருக்கும்? என்று கேட்டால், ‘வந்து பாருங்கள்’ என்பது அவர்களின் பதிலுரையாக இருக்கும். புதிதாக ஒரு அரசியல் கட்சியில் இடம் பெயர வேண்டுமென்று விரும்பி அந்த கட்சியில் ஏற்கெனவே இருக்கும் நபரிடம் கட்சி அனுபவம் பற்றி கேட்டால் அவர்கள் கூறக்கூடிய பதில் ‘வந்து பாருங்கள்’ என்பதே. இன்றைய நற்செய்தி வாசகத்திலும் சீடர்கள் இயேசுவின் வாழ்க்கை பயணத்தில் இணைந்து பயணிக்க ஆவல் கொள்கின்றார்கள். இயேசுவின் அனுபவ வார்த்தை ‘வந்து பாருங்கள்’ என்பதே. வந்து பார்க்கின்ற போது தான் வியந்து போகின்றார்கள். பொதுவாக இதனை அழைத்தல் அல்லது அருள்பணியாளருக்கான அழைப்புப் பகுதி என்று நமது பார்வையைக் குறுக்கிக் கொள்ளக் கூடாது.
இறைவன் நம் எல்லோரையும் அழைக்கின்றார். இறைவன் யாரென்று அறியாமல் நாம் தூங்கும்போது, நம் பிறழ்வுபட்ட வாழ்க்கை முறைகளில் நாம் சிக்கித் தவிக்கும் போது, மற்றவர்களின் பின்னால் நாம் சென்று கொண்டிருக்கும் போது, நம் வேலைகளில், படிப்பில், பயணத்தில், இதைச் செய்! இங்கே வா! இதுதான் நான்! என்று அவர் நம் உள்ளுணர்வில், உறவு நிலையில் அழைத்துக் கொண்டேயிருக்கின்றார். ஆனால் நாம் தான் அவரை பார்க்க தயாராகவில்லை. அதனால் தான் இன்று ஆலயங்கள் வெற்றிடமாக இருக்கிறது. நாம் இறைவனை பார்க்க தயாரா? வியந்து போக புறப்படுவோம்.
அருட்பணி. பிரதாப்